Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சமாதானப் புறாவை பறக்கவிடும் இபிஎஸ்: முடிவுக்கு வருமா அதிமுக உட்கட்சி மோதல்?

சமாதானப் புறாவை பறக்கவிடும் இபிஎஸ்: முடிவுக்கு வருமா அதிமுக உட்கட்சி மோதல்?

தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு 25 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர்

பகிரவும் WhatsApp Facebook

அதிமுகவின் அதிருப்தி அணியினர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ரகசிய ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியான நிலையில், கட்சியின் 55-வது ஆண்டு விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவை தேர்தலில், 108 இடங்களில் தவெகவும், 59 இடங்களில் திமுகவும், 47 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது. விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைக்க முயற்சிகள் எடுத்த நிலையில், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயன்றார் என எடப்பாடி பழனிசாமி மீது எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டினர்.

அதோடு, தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு 25 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில், தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த 20 மாவட்டச் செயலாளர்களை, இபிஎஸ் பதவியில் இருந்து நீக்கினார்.

தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்ற அதிருப்தி அணியின் கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டது. இதனால், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிருப்தி அணியினர் சட்டப்பேரவையில் தனி அணியாக செயல்பட்டனர். அதிமுக தலைமைக் கழகத்திற்கு வருவதையும் நிறுத்தினர்.

இந்த நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த தோல்விக்கும் இபிஎஸ்தான் காரணம் என குற்றம்சாட்டிய அதிருப்தியாளர்கள், சென்னையில் உள்ள எஸ்.பி. வேலுமணி வீட்டில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனை அமைச்சர் செங்கோட்டையனும் நேற்று உறுதிப்படுத்தினார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறுகையில், "எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தால், இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தவெக தலைமை உறுதி கொடுக்கிறது. இதனை ஏற்று பதவியை ராஜினாமா செய்ய ஒரு பிரிவினர் தயாராக உள்ளனர். மற்றொரு பிரிவினர் பொதுக்குழுவைக் கூட்டி இபிஎஸ்ஸை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, கட்சியை கைப்பற்றலாம் என்கின்றனர். இதுதொடர்பாக எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது" என்றார்.

இந்நிலையில், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தி, கட்சியின் ஆண்டு விழாவில் பங்கேற்க வைக்க இபிஎஸ் தரப்பில் ஒரு குழுவினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். ஆண்டு விழா நிகழ்வுகளில் சி.வி.சண்முகம் தவிர இதர நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சமாதானப் படலத்திற்கு முழுமையான வெற்றி கிடைக்குமா என்பதற்கு, வரும் 17-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கும் 55-வது ஆண்டு விழாவில் தெரியவரும்.

மறுக்கிறார் தங்கமணி

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணியிடம் கேட்டபோது, “நான் இரு நாட்களாக சென்னையில் இல்லை. பத்திரிகை செய்திகளில் வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை. நாங்கள் எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை. கட்சியை வளர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். வேறு எந்த திட்டமும் இல்லை” என்றார்.



முந்தைய செய்தி
ZOHO ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை
அடுத்த செய்தி
AI மூலம் கடைசி நிமிடத்தில் வினாத்தாள் தயாரிக்கலாம்

தொடர்புடைய செய்திகள்